29ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி : சூறாவளி காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் - எச்சரிக்கை
பெய்து வரும் கனமழையால் இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், நெல்லை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. தொடர் கனமழை காரணமாக சென்னையை பொருத்தவரை செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குமரி கடல் அருகில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வரும் 29ம் தேதி அந்தமான் அருகே உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு தீவிர மழை இருக்கும். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 30-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும்.
இதனால், வருகிற 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடை இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.