உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

tamilnadu-rain
By Nandhini Nov 25, 2021 05:38 AM GMT
Report

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு -

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நாள்களில் தமிழக கடலோர கரையை நோக்கி வரும்.

இந்நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது மேற்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகள் இடையே வரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், ராமநாதபுரம், சிவகங்கை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய உள்ளது.

மேலும், இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும். தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.