13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
'வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு -
தெற்கு அந்தமான் கடல் பகுதியில், 3.1 கி.மீ., உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் கனமழை மற்றும் சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இன்று கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலுார், பெரம்பலுார், கடலுார், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கன மழை பெய்யும்.நாளை தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.வரும், 24, 25ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமாக, புதுச்சேரியில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. திருச்சி நந்தியார் தலை, விழுப்புரம் அவலுார்பேட்டையில், 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.