காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது : இந்த மாவட்டங்களில் மழை கொட்டும்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே முழுமையாக கரையை கடந்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது சென்னை மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 11.9 சென்டிமீட்டர் மழையும், சோழவரத்தில் 10.4 சென்டி மீட்டர் மழையும் , திருத்தணியில் 9.8 சென்டி மீட்டர் மழையும் ஆவடியில் 9.4 சென்டி மீட்டர் மழையும் , பூண்டியில் 7.8 சென்டி மீட்டர் மழையும், தாமரை பக்கத்தில் 6.8 சென்டி மீட்டர் மழையும் , ஊத்துக்கோட்டையில் 7.3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. இந்நிலையில், இரவு 1.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில், அதிகாலை 4 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது -
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே கடற்கரையைக் கடக்க தொடங்கியது முதல் சென்னையின் பல இடங்களில் பலத்த காற்று வீசியது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்துள்ளது. வட மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இருந்தாலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை கொட்டும் என்று என்றார்.