முல்லைப் பெரியாறு நீர்மட்டம் உயர்ந்தது - கரையோர மக்களுக்கு 2ம் கட்ட எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அணைகள், ஏரிகள், ஆறுகள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. இதனால் வெள்ள அபாயம் ஏற்படாத வகையில் கரையோரம் வாழும் மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை 141 அடியை எட்டியிருக்கிறது. 152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நீர்மட்டம் தற்போது 141 அடியை தொட்டுள்ளது.
இதனால், அணைக்கு நீர்வரத்து 3340 கன அடியாக இருக்கிறது. இதன் காரணமாக, வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்பு தரை உள்ளிட்ட நீரோட்ட பாதைகளுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டினால் அணையிலிருந்து 13 மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரி நீர் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.