சென்னை கனமழை பாதிப்பு - நேரில் பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் சசிகலா
சசிகலா சென்னை கோட்டூர்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ள நீர் சாலைகளில் ஓடியது. வீடுகளிலும் மழை நீர் தேங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சசிகலா சென்னை கோட்டூர்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது, மக்களிடம் ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், தமிழகத்தில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்ற மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.