தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர் - புறநகர் ரயில் சேவை பாதிப்பு
சென்னை - திருவள்ளூர் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் புறநகர் மின்சார ரயில்வே பாதிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவிக்கையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இதனையடுத்து, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் விடியவிடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனால், ஆவடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் ரயில் நிலைய தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மற்றொரு வழித்தடமான சென்னை - கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை வழக்கம்போல நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.