கொட்டித் தீர்க்கும் கனமழை - தமிழகத்தில் 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதனால், சென்னை, எண்ணூர், காட்டுபள்ளி, கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், கரையை நெருங்கி வருகிறது.
இந்நிலையில், வானிலை தொடர்பான எச்சரிக்கையாக இந்தக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. 3ம் எண் புயல் கூண்டு என்பது காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல், தூத்துக்குடி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 9ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி, மண்டபத்தூர் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மண் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. தரைக் காற்றும் வேகமாக வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால், மீனவர்கள் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.