வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர் , விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு ,சேலம் ,வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும்.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதால் பலத்த மழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழையும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். இதனால் தமிழகத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.