சென்னை வானிலை ரேடார் விரைவில் சரி செய்யப்படும் : மத்திய அரசு உறுதி

tamilnadu-rain
By Nandhini Nov 09, 2021 04:06 AM GMT
Report

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் 'ரேடார்' பழுதடைந்துள்ளது. இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக, சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் காலநிலை மாற்றம் காரணமாக புயல்களின் தன்மை, மழைப் பொழிவு குறித்த எதிர்பார்ப்பு போன்றவற்றை கணிப்பது கடினமாக வருகிறது.

சென்னை துறைமுகம் அருகே உள்ள 'டாப்ளர் வெதர் ரேடார் 15' என்ற கருவி தான் 15 ஆண்டுகளாக, மழை குறித்த முன் தகவல்களை தந்துக் கொண்டிருந்தது. இந்த கருவி ஏற்கனவே பலமுறை பழுதாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பழுதாகி உள்ள தகவல் சமீபத்தில் தெரிய வந்தது. இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கவனத்திற்கு, மதுரை லோக்சபா தொகுதி எம்.பி.யும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான வெங்கடேசன் கொண்டு சென்றார்.

இந்நிலையில், வெங்கடேசனிடம் மத்திய புவி அறிவியல் துறையின் செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், சென்னை துறைமுகத் தில் உள்ள ரேடாரை பழுது நீக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும். தற்போது நிலவி வரும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் முக்கியமான ரேடார் வேலை செய்ய முடியாமல் போனது குறித்து, உரிய முறையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஏற்பாடாக ஸ்ரீஹரிகோட்டா மற்றும் காரைக்காலில் உள்ள ரேடார்கள் உதவியுடன் மழை குறித்த முன்னறிவுப்புகள் எந்தவித தாமதமும், இடையூறும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.