அடுத்த 3 மணி நேரம் எப்படி இருக்கும்? 16 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் கனமழை ஓயாமல் பெய்து வருகின்றது. இதனால் மக்களின் வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
பாலங்கள், சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சு வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. கனமழை எப்போது நிற்கும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம் நோக்கி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் இன்று மட்டுமல்லாமல் நாளை, நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.