சென்னை கனமழையால் போக்குவரத்து மாற்றம் - முக்கிய அறிவிப்பு
சென்னையில் கனமழை பெய்து வருவதால், எழும்பூர் மற்றும் 3 ரயில்வே சுரங்க பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையால் சாலை மழை நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீரால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.
மாம்பலத்திலிருந்து தியாகராயநகர் செல்லக்கூடிய துரைசாமி சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு பூந்தமல்லி சாலை இணைக்கும் சுரங்கப்பாதை என சென்னையில் நேற்று 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னை நகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரத்தின்படி , மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் ஈவெரா சாலை கங்குரெட்டி சுரங்கப்பாதை ,வியாசர்பாடி சுரங்கப்பாதை , கணேஷபுரம் சுரங்கப்பாதை மழை நீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்.
ஈவேரா சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து , நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈவேரா சாலை காந்தி இர்வின் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும். பாந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் பாந்தியன் சாலை வழியாக செல்லலாம் . மார்ஷல் ரோட்டிலிருந்து பாந்தியன் ரவுண்டாவை நோக்கி செல்ல அனுமதி உண்டு.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.