முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தம் - மின்சாரம் தொடர்பாக புகார் எண் அறிவிப்பு!

tamilnadu-rain
By Nandhini Nov 08, 2021 06:14 AM GMT
Report

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மோட்டர்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் மின் வினியோகம் மீண்டும் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுகளை மேற்கொண்டார்.

பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது -

மழையால் பாதிப்பு ஏற்படக்கூடாது என 0.27% மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. பருவமழையின்போது சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு துணை மின் நிலையத்தில் மட்டுமே மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் 12237 மின் இணைப்புகள் கனமழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் பெரும்பாலும் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்வினியோகம் தங்குதடையின்றி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை மின்சாரம் தாக்கி யாரும் உயிரிழக்கவில்லை. அதுபோன்று சூழல் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தொடர்பாக பாதிப்புகள் ஏதும் இருந்தால் 9498794987 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மின்தடை ஏற்பட்டு உள்ள சில பகுதிகளுக்கும் விரைவில் மின் வினியோகம் சீராகும். பெறப்பட்டுள்ள புகார்களுக்கு மாலைக்குள் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.