வெளுத்து வாங்கும் கனமழை : இந்த 14 மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்" - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக 2015ம் ஆண்டை ஒப்பிடும்போது நவம்பர் 7ம் தேதி ஒரே நாளில் மட்டும் சென்னையில் 21சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதனால் சென்னையில் பல்வேறு வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தற்போது, சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
தொடர் மழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, நாகை, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், சேலம், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மழையானது வருகிற 11ம் தேதி வரை தொடரும்.
சென்னை, கடலூர் ,விழுப்புரம், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,திருவள்ளூர், வேலூர் ,ராணிப்பேட்டை ,திருப்பத்தூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ,புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.