சென்னையை புரட்டிப்போட்ட கனமழை - நீரில் மூழ்கிய வீடுகள் - மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னை பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
மீட்பு பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மழை காரணமாக அம்பத்தூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செம்மஞ்சேரி பகுதியில் ஜவஹர் நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.இதனால், மக்கள் வீடுகளை விட்டு, அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியேற முடியாத சூழல் சிக்கியுள்ளனர்.
புளியந்தோப்பு பகுதியில் மழை நீரில் மாநகர பஸ் சிக்கியது. அதை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால், மூடப்பட்டுள்ளது. எழும்பூர் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கி நிரம்பியுள்ளது. இதனால், அந்த பகுதியில் சென்ற வாகனங்களில் தண்ணீர் புகுந்து சேதமடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னை வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்க பாதை மழைநீரில் மூழ்கி உள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளதால், மக்கள் வெளியேற்றியுள்ளனர்.
கொளத்தூரில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. கே.கே.நகர் பகுதியில் பல்வேறு சாலைகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி இருக்கின்றன. திருவொற்றியூர் பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
டி.பி.கே., நெடுஞ்சாலை, ராஜா சண்முகம் நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. பாம்பு போன்ற உயிரினங்கள் வீடுகளுக்குள் வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.