செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் தண்ணீர் திறக்க முடிவு - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த கலெக்டர்
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரி நிறைந்து வருகிறது. இதனால், ஏரிகள் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்ட கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இங்குள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வருமாறு -
புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பதால் இன்று காலை 11 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும். இதனால் கரையோர மக்கள் நாரவாரிகுப்பம், பெருங்குப்பம், மஞ்சம்குப்பம், தண்டல் கழனி, வடகரை, கிராண்ட்லைன், புழல் மணலி, சடையான்குப்பம் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
புழல் ஏரியின் மொத்த நீர் மட்டம்: 21.20 அடி. இதில் தற்போது 19.30 அடியாக தண்ணீர் உயர்ந்துள்ளது. இதன் முழு கொள்ளளவு 3, 300 மில்லியன் கன அடி நீர் . 2,872 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. இதன் காரணமாக 11 மணிக்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படும். இது போல் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிவிப்பில்; செம்பரம்பாக்கம் ஏரியில் மதியம் 1.00 மணி முதல் 1.30 லிருந்து தண்ணீர் திறக்கப்படும்.
இதனால் நத்தம், குன்றத்தூர் , நத்தம்பாக்கம்,வழுதலம்பேடு, பூந்தண்டலம், பழந்தண்டலம் ,எருமையூர், திருமுடிவாக்கம் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் அணை கொள்ளளவு 25.55 அடி. தற்போது அணையின் நீர் இருப்பு தற்போது 21.22 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.