தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கபோகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

tamilnadu-rain
By Nandhini Oct 26, 2021 07:25 AM GMT
Report

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி ,சிவகங்கை, புதுக்கோட்டை,கோயமுத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ,தூத்துக்குடி ,ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். வரும் 28ம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 29ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

30ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வருகிற 29 முதல் 31ம் தேதி வரை மன்னார்வளைகுடா தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கபோகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை | Tamilnadu Rain