தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் வெளுத்து வாங்கப் போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

tamilnadu-rain
By Nandhini Oct 24, 2021 07:16 AM GMT
Report

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், வழக்கத்தை விட 2 வாரம் தாமதமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாகவும், இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்க்கப் போகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துக்கிறது.

இந்நிலையில், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது -

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீட்டிக்கும். லட்சத்தீவு அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று சேலம், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். மேலும், நாளை புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் 26 மற்றும் 27ம் தேதிகளில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும் என்றும், இதனால் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.