அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது.
இது குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு-
வடக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மே 24ம் தேதி வலுப்பெற்று மே 26ம் தேதி கரையை கடக்க உள்ளது.
இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்திலும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.