தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
கடலூரில் தேமுதிக பிரமுகர் ஜெய்சங்கருக்கு சொந்தமான நிதி நிறுவனம், பள்ளி, சினிமா தியேட்டர் உள்பட பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் ஜெயபிரியா என்ற நிதி நிறுவனம் 1985ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஜெயபிரியா நிதி நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் 51 கிளைகள் இருக்கின்றன. 1985ம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் படிப்படியாக வளர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் இதற்கு கிளைகள் இருக்கிறது.
ஜெயபிரியா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ரூட்டி, விருதாச்சலம், நெல்வேலி, சிதம்பரம், திட்டக்குடி, வடலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்குழுமத்திற்கு சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், உணவு பொருட்கள் தயாரிப்பு, திருமண மண்டபகங்கள் உள்ளிட்ட தொழில்கள் இருக்கின்றன. இந்நிலையில், இந்நிறுவனங்களில் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜெய்சங்கர் தேமுதிக கட்சியின் முக்கிய பதவியில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.