"முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை தமிழ்நாடு அரசே பராமரிக்கும்" - அமைச்சர் பொன்முடி தகவல்
சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பராமரிக்கப்படவில்லை என்றும், இது அவமரியாதை நடவடிக்கை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜெயலலிதா அவர்களின் சிலையை அரசால் பராமரிக்க முடியவில்லை என்றால், அந்த பொறுப்பை அதிமுகவிடம் கொடுத்து விடலாம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இது குறித்து விளக்கம் தெரிவித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது -
"சுதந்திர போராட்ட தலைவர்கள், வீரர்கள், தியாகிகள் உள்ளிட்டவர்கள் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் போது மட்டுமே அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என்ற நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பாக நிறுவப்பட்டுள்ள எந்த ஒரு தலைவரின் சிலைக்கும், அரசின் சார்பாக தினசரி மாலையிடும் வழக்கம் கிடையாது.
இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி துறை மன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி மட்டும் தமிழ்நாடு அரசு சார்பில் கட்டாயமாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். ஜெயலலிதா திருவுருவ சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடம் பொதுப்பணித் துறையால் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
அரசின் சார்பில் சிலை மற்றும் நினைவகங்கள் யாவும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இருக்கிறது. இதனால் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் வழங்கும் நடைமுறை கிடையாது. ஆதலால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலை தொடர்ந்து தமிழக அரசால் பராமரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.