முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி கொலை! தப்பியோடிய 2 பேருக்கு போலீஸ் வலை!
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டி குமாரமங்கலம் (76) உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மறைந்த நிலையில் டெல்லியில் உள்ள வசந்த் விஹாரில் தனது இல்லத்தில் கிட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், விஹாரில் உள்ள இல்லத்தில் கிட்டி குமாரமங்கலத்தை கொள்ளையர்கள் கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக 2 பேரை டெல்லி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
துணிகளை துவைத்து தரும் தொழிலாளி ராஜு தலையணையால் அமுக்கி கிட்டியை கொன்றுள்ளதாக அவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளை அடிக்கும் முயற்சியின்போது இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரங்கராஜன் குமாரமங்கலம் காங்கிரஸ், பாஜகவிலிருந்து சேலம், திருச்சி தொகுதி எம்.பி. ஆக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.