பேரறிவாளன் எங்களுடன் வாழ தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் - அற்புதம்மாள் வேண்டுகோள்
பேரறிவாளன் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து இருப்பதால், இனிவரும் காலங்களில் வயதான எங்களுடன் வாழ தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், தற்போது தமிழக அரசு உத்தரவின் பேரில் பரோலில் ஜோலார்பேட்டை உள்ள அவரது வீட்டில் உள்ளார்.
இந்நிலையில், அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு காணொலிக் காட்சி மூலம் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார், அதில் செய்யாத தவறுக்காக பேரறிவாளன் 30 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார். மரண தண்டனை கைதியாக சிறையில் இருந்துள்ளார்.
யாரோ செய்த தவறுக்கு இவன் பழிவாங்கப்பட்டுள்ளான். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட பேரறிவாளன் விடுதலை செய்ய பட வேண்டியவன் என கூறியிருந்தனர். பேரறிவாளன் சிறையில் இருந்த காலங்களில் பல பேருக்கு படிப்பறிவை சொல்லி தந்துள்ளான்.
இந்நிலையில், அவனுக்கு பலவிதமான நோய்கள் இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை எடுக்கக் கூடிய நிலையில் பேரறிவாளன் இல்லை. எனவே தொடர்ந்து சிகிச்சை அளிக்க பேரறிவாளன், தொடர்ந்து வீட்டிலேயே இருக்கவும், வயதான என்னுடன் கடைசி காலத்தில் என்னுடன் இருக்கவும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்.
இந்த முப்பது ஆண்டுகாலம் அவனுடைய வாழ்க்கையே போச்சு, குடும்ப நிம்மதியும் போச்சு. எனவே அவனுடைய உடல் நலனைக் கருதி தமிழக அரசு பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்.
சிறையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால் சிறைக்கைதிகளை பரோலில் விடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்த உடனேயே, நான் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தேன். அதனை ஏற்று, தமிழக அரசு பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. அதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே இனிவரும் காலங்களில் எங்களுடன் பேரறிவாளன் இருக்க தமிழக அரசு அவனுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று அற்புதமான கேட்டுக்கொண்டுள்ளார்.