11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படும் - கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி - தமிழக அரசு!
தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அதிகரித்து வருவதால் கடந்த 10ம் தேதி முதல் தளர்வுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் அடுத்தடுத்த வாரங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கிறது. முழு ஊரடங்கு தற்போது நல்ல பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அமலில் இருந்த ஊரடங்கு வரும் 7ம் தேதியோடு நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், நேற்று உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த ஆலோசனைக் கூட்டத்தில், எந்தப் பகுதியில் கொரோனா பாதிப்புகள் குறைவாக உள்ளதோ அந்தப் பகுதியில் தளர்வுகள் அளிக்குமாறு அதிகாரிகள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது.
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
இதனையடுத்து, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படும் என்றும், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படும் என்றும், அனைத்து அரசு அலுவலகங்களும் 30% ஊழியர்களுடன் திங்கட்கிழமை முதல் செயல்படலாம் என்றும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.