என் உயிரையும் பணயம் வைத்து உள்ளே சென்றேன் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
நேற்று கோவைக்கு சென்றிருந்த தமிழக முதல்வர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், கொரோனா வார்டுக்குள்ளேயே சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார்.
முதல்வர் கொரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தது பெரும் பரபரப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
சிகிச்சை பெறும் நோயாளிகள், தங்கள் உறவுகளை சந்திக்க முடியாதபோது, முதல்வர் நேரில் வந்து நலம் விசாரித்ததால், நோயாளிகளும், நோயாளிகளின் குடும்பத்தினர் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.
இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள். எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும்” என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்ததாவது -
Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
மருந்தோடு சேர்த்து மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் நம்பிக்கையும், ஆறுதலும் தான் நோயைக் குணமாக்கும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்! Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று என் மீது அக்கறை கொண்டவர்கள் கூறினார்கள்.
இருந்தாலும், என் உயிரையும் பணயம் வைத்து, நான் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர் தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன். இப்பெருந்தொற்றிலிருந்து நாம் மிக விரைவில் வெல்வோம் என்றார்.
கொரோனா நோயாளிகளைச் சந்தித்த ஒரே முதல்வர் ஸ்டாலின் - ஊடகங்கள் புகழாரம்
கொரோனா நோயாளிகளைக் காண ‘பிபிஇ’ கவச உடை அணிந்து முதல்வர் மருத்துவ அறைக்குச் சென்று, “எப்படி இருக்கீங்க.. மூச்சு விட முடியுதா.. மருத்துவர்கள் எப்படிப் பார்த்துக்கொள்கிறார்கள், சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள்,” என்று ஆறுதலாக நோயாளிகளிடம் பேசினார்.
“நாட்டிலேயே ‘பிபிஇ’ கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை எந்த மாநில முதல்வரும் இதுவரை சந்தித்தது கிடையாது.
மருத்துவமனைகளுக்குச் சென்று பார்வையிட்டாலும்கூட, நோயாளிகளின் வார்டுக்கு முதல்வர்கள் யாரும் இதுவரை சென்றது இல்லை.
ஆனால் முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக நோயாளிகளைச் சந்தித்துள்ளார் என்றும், கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளைச் சந்தித்த ஒரே முதல்வர் ஸ்டாலின் என்றும் ஊடகங்கள் தமிழக முதல்வருக்கு புகழாரம் சூட்டியுள்ளன.