திமுகவுடன் ஒன்றுசேர்ந்த 'விஜய் மக்கள் இயக்கம்..' - நடிகர் விஜய்க்கே ‘ஷாக்’ கொடுத்த ரசிகர்கள் - பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்
தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன், விஜய் மக்கள் இயக்கம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் என்று அறிவித்துள்ளார். இச்செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் திமுக, அதிமுக இடையே நேரடியாக பலத்த மோதல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியின்றன.
நடிகர் விஜய்யின் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பிலும் விஜய் ரசிகர்கள் போட்டியிடுகிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 இடங்களில் போட்டியிட்டு, 129 இடங்களில் வெற்றி பெற்றது.
இது பல அரசியல் கட்சிகளின் ஸ்ட்ரைக் ரேட்டை விட அதிகமாகும். கடந்த காலங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்ற போதிலும், நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தினரின் கொடியைப் பயன்படுத்த விஜய் அனுமதி அளித்திருந்தது அதுவே முதல்முறையாகும்.
இந்த முறை மீண்டும் அனுமதி அளித்திருப்பதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமாக களத்தில் இறங்கி ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது -
'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கலாமா அல்லது தனித்து போட்டியிடுவதா என ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
திமுகவை ஆதரித்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் இன்று முதல் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக, விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இச்செய்தி விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய்க்கே ‘ஷாக்’ கொடுத்து இருக்கிறது.