முதல்முறையாக நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக - தொண்டர்கள் கொண்டாட்டம்
முதல் முறையாக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றி இருக்கிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலான கடந்த அக்டோபர் 6 ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது.
இத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 22ம் தேதி 9 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி நடைபெறவிருந்த ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள நெமிலி ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் அதிகாரிகள் செய்த சிறிய குளறுபடிகள் காரணமாக அதிமுக கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மறைமுக தேர்தல் போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதுவரை அதிமுக மட்டுமே நெமிலி ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்று வந்த நிலையில், தற்போது முதல் முறையாக திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவை சேர்ந்த வடிவேலு நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.