நான் ஒரு சாதாரண விவசாயி, என்னிடம் இருப்பது சில ஆடுகள்தான் : அண்ணாமலை டுவிட்
500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிஜிஆர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இந்நிலையில், தன்னிடம் சில ஆடுகள் மட்டும்தான் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறியுள்ளார். அவதூறு கருத்து பரப்பியதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிஜிஆர் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
அந்த நோட்டீசில் 10 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இதை தவறினால், நீதிமன்றத்தை நாடுவோம் என அந்த நோட்டீசில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதில் அளித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், தான் ஒரு சாதாரண விவசாயி, தன்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவும் இல்லை. நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது சந்திப்போம் என்று பதிவிட்டுள்ளார்.
அண்மையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முறைகேடு புகார்களை முன்வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிஜிஆர் நிறுவனத்திற்கு மின்வாரியம் சலுகைகளை வழங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.