அன்றைக்கு ஜெயலலிதாவால் முடிந்தது, ஸ்டாலினால் முடியாதா என்ன? சசிகலா கேள்வி
அன்றைய காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட ஜெயலலிதாவால் சரி செய்ய முடிந்தது. அப்படி இருக்கும்போது இன்றைய காலகட்டத்தில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைந்து முடிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முடியாதா என்ன என்று சசிகலா கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்தும் அதிமுக பொதுச் செயலாளர் என்கிற பெயரில் வி. கே. சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது -
ஆட்சியாளர்கள் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு கொண்டிருக்கிறார்கள். மண்டல வாரியாக அதிகாரிகள் வைத்துவிட்டீர்கள். இலவச தொலைபேசி எண்கள் அறிவிப்பு செய்துவிட்டீர்கள். அமைச்சர் இதை அகற்றி விட்டோம் அதை அகற்றிவிட்டோம் என்று பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
உண்மை என்னவென்றால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் அனைத்து பகுதிகளிலும் எங்குபார்த்தாலும் கொஞ்சம் கூட முடியாமல் தண்ணீர் வடியாமல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடந்த காலங்களில் இது போன்ற சூழ்நிலைகளில் ஜெயலலிதா துரிதமாக செயல்பட்டு ராட்சச மோட்டார் பம்புகள் அதிக எண்ணிக்கையில் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைத்து 24 மணி நேரத்திற்குள் சரி செய்துள்ளார்.
அப்படி அதுமாதிரி துரிதமான நடவடிக்கை மேற்கொண்டால் தான் தேங்கிய நீரை விரைவில் வெளியேற்ற முடியும் என்கிறார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இரண்டு நாட்களாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் காலியாகி விட்டதாக குடியிருப்போர் சொல்கிறார்கள். அவர்களது வீடுகளில் உள்ள போர்களில் நீர் இருந்தும் மோட்டார் மூலம் நீரை மாடியிலுள்ள டேங்குகள் எட்ட முடியாமல் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபோல மழை தண்ணீரால் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளிவராத மக்களுக்கு தேவையான குடிநீர் லாரிகள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும். வீட்டிலிருந்து வெளிவரமுடியாத அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் வயதானவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு இருப்பதற்கு தேவையான மருந்து மாத்திரைகள் பெண்களுக்கு அதி அவசியமான நாப்கின்களை கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
முகாம்களில் தங்க வைத்துள்ள மக்களுக்கு சுகாதாரமான உணவு மருத்துவ உதவிகள் தேநீர் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள் பகுதிகளை பார்வையிட செல்வதால் அங்கு உள்ள அரசு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபடுவதை தவிர்த்து அவர்களுக்கு வரைபடங்களை காண்பித்து விளக்கம் கொடுப்பதிலேயே பெரும்பகுதி நேரத்தை செலவிடுகிறார்கள்.
இந்த அரசு எந்தவித முன்னேற்பாடும் இல்லாத காரணத்தினால் தான் தற்போது இந்த அளவுக்கு மக்கள் பாதிப்படைந்து இருப்பதாக கருதுகிறார்கள் என்று தெரிவித்துள்ள சசிகலா, மழை காலங்களில் சென்னையில் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு மிக முக்கிய காரணம் திமுக ஆட்சி காலத்தில் எந்தவித வசதியும் இன்றி தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் முக்கிய சாலைகளில் கட்டப்பட்ட பாலங்கள் தான் காரணம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
2004ஆம் ஆண்டு சுனாமி பேரலையால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளையும் தொடர்ந்து 2005 இல் ஏற்பட்ட புயலின் போது எண்ணற்ற மரங்கள் சாய்ந்து விழுந்தது.
ஒரே இரவில் அப்புறப்படுத்தி வெள்ள பாதிப்புகளை சரி செய்தார் ஜெயலலிதா. போர்க்கால நடவடிக்கை எடுத்து சரி செய்தார். அன்றைய காலகட்டத்தில் இருந்த கட்டமைப்புகளை கொண்டு சரி செய்ய முடிந்தது என்றால் தற்போது உள்ள ஆட்சியாளர்களால் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் நம்மிடமுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விரைந்து சரி செய்து மக்களை காப்பாற்ற வாய்ப்புகள் இருக்கிறது. அதை உடனடியாக போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.