‘ஜெயக்குமார் தான் டான்ஸிங் ரோஸ்’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.
இந்தத் திரைப்படம் திமுகவின் பிரச்சார படமாகவே உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் தொடர்பு இல்லை என்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவின் நல்லாட்சியை பா.ரஞ்சித் மறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சார்பட்டா படத்திற்கு திமுக தரப்பில் நல்ல வரவேற்பு பெருகியுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலைமையையும் அதை கழகம், கலைஞர், கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது என்று பதிவிட்டிருந்தார்.
இதனால், ‘சார்பட்டா’ திரைப்படம் விவகாரத்தில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே சலசலப்பு நீட்டித்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மா.சுப்பிரமணியனிடம், ஜெயக்குமார் பாக்ஸிங் செய்வது போன்ற வீடியோவை பதிவிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் கூறிய மா. சுப்பிரமணியன், ஜெயக்குமார் குற்றச்சாட்டையும் பார்த்தேன். ‘சார்பட்டா’ திரைப்படத்தில் விடுபட்ட காட்சிகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஜெயக்குமார் தான் டான்சிங் ரோஸ் என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சியையும் நீங்கள் பாருங்கள் என்று கிண்டலாக பதிலளித்தார்.
