“இந்துக்கள் வசிக்கும் இடத்தில் இனிமேல் ‘பீப்’ விற்கக் கூடாது” – பாஜக அரசு புதிய சட்டம் பிறப்பிப்பு!
அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த தேர்தலிலும், இந்தத் தேர்தலிலும் ஹிமந்த் பிஸ்வா ஷர்மாவை முதலமைச்சராகியுள்ளார். ஆட்சிக்கு வந்ததிலிருந்து புதுப்புது சட்டங்களை நிறைவேற்றி வருகிறார் முதல்வர் ஹிமந்த்.
அசாமில் மக்கள் தொகை அதிகரிப்பதால், இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது; அவ்வாறு பெற்றுக்கொண்டால் அரசு வேலைகள் மற்றும் அரசு சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று திட்டவட்டமாக திட்டம் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதம், ஜாதி போன்ற முக்கிய தகவல்களை மறைத்து திருமணம் செய்வதைத் தடுக்க, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும், மதம் மாற்றுவதற்காக காதல் என்ற பெயரில் பழகி திருமணம் செய்யும் லவ் ஜிகாத் சதி நடப்பதாகவும், அதைத் தடுக்க இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, தற்போது கால்நடை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஒரு புதிய மசோதா ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் ஹிமந்த்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
இந்துக்கள், ஜெயின்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாட்டிறைச்சி விற்கக் கூடாது.
எந்தவொரு கோயில், சத்ரம் உள்ளிட்ட இந்து மதத்தைச் சேர்ந்த இடங்களில், 5 கிலோமீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி வர்த்தகம் அனுமதிக்கப்படாது.
நாட்டின் பிற பகுதிகளிலிருந்து அசாமிற்குள்ளோ, அசாமிலிருந்து வெளிப் பகுதிகளுக்கோ மாடுகளைக் கொண்டுவர அனுமதி இல்லை.
புதிய சட்டத்தின் கீழ் அரசு கால்நடை அதிகாரிகள், மாடுகளின் உடற்தகுதி சான்றிதழ்களை வழங்கிய பின்னரே அசாமில் மாடுகளை வெட்ட முடியும்.
மாடுகளையும், அவற்றின் கன்றுகளையும் கொல்ல கூடாது. 14 வயதுக்கு மேற்பட்ட மாடுகள் மட்டுமே வெட்ட அனுமதிக்கப்படும்.
மத விழாக்களில் மாட்டை அறுக்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த மசோதா சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.