தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்ததில் மகிழ்ச்சி இல்லை – கமல்
நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் 15 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், மீதமிருக்கும் 28 பேர் இணை அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்திலிருந்து தேர்வாகி, மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல். முருகனுக்கு மீன்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கால்நடை மற்றும் பால்வளத் துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதிமய்யம் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். மேலும், நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்துள்ளது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.