முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் : சசிகலா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

tamilnadu-politics
By Nandhini Jun 30, 2021 08:43 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சசிகலா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் கடந்த 9ம் தேதி திண்டிவனம் ரோஷனை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது -

நான் கடந்த 7-ம் தேதி வி.கே.சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தேன். அதற்கு வி.கே.சசிகலா நேரடியாக பதில் அளிக்கவில்லை. தன் அடியாட்களை வைத்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வந்து கொண்டிருக்கிறார். மேலும், செல்போனிலும் என்னை பயமுறுத்தும் வகையில் 500 பேர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துக்கொண்டிருக்கின்றன. சசிகலா பற்றி பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர். இதற்கு வி.கே.சசிகலாவின் தூண்டுதல்தான் காரணம்.

எனவே கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாக பேசவும் காரணமாக இருந்த வி.கே.சசிகலா மீதும், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சசிகலா மீது கொலை மிரட்டல், அநாகரிகமாக பேசுதல், அடுத்தவரை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையில் தகவலைப் பதிவிடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் : சசிகலா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு | Tamilnadu Politics