ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வோருக்கு தலா ரூ.3 கோடி பரிசு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போகும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர்.
அதன் பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது -
விளையாட்டுத் துறையை விளையாட்டாக எடுத்துக் கொண்டால் அது விளையாட்டாக போய்விடும். விளையாட்டாக போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் விளையாட்டுத்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு துணை நிற்கும். விளையாட்டு வீரர்களுக்கு உடல் உறுதி, மன உறுதியும், ஊக்கமும் மிக அவசியம். திமுக தேர்தல் அறிக்கையில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தோம்.
நிச்சயம் வாக்குறுதிகள் நிறைவேற்றுவோம். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டுக்கு பெருமை. விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வெல்வோருக்கு ரூ.1 கோடியும் தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil
