“ஸ்டாலினை போல் சட்டையை கிழித்துக் கொண்டு நாடகமாட மாட்டோம்” – செல்லூர் ராஜூ விளாசல்!
கச்சத்தீவு, ஸ்டெர்லைட் , முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட பல பிரச்சனைக்கும் காரணம் திமுகதான் என்றும், சட்டப்பேரவையில் சட்டையை கிழித்து மு.க.ஸ்டாலின் நாடகமாடினார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது -
கச்சத்தீவு, ஸ்டெர்லைட் , முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட பல பிரச்சனைக்கும் காரணமே திமுகதான். வீர வசனம் பேசி டெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
ஆட்சிக்கு வந்வுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறினார். ஆனால், நீட் தேர்வுக்கு தயாராகச் சொல்கிறார். மக்களிடம் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த கட்சி என்றால் அது திமுக கட்சித்தான். அதிமுக கட்சிக்குள் பிளவுபடுத்தும் வேலைகளை பலரும் செய்து வருகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் பல மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால், திமுக எத்தனை கடைகளை அடைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஸ்டாலின் போல சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்து நாடகம் போட மாட்டோம். உண்மையாகவே எங்களுடைய எதிர்ப்புகளை ஆக்கப்பூர்வமாக சபைக்கு உள்ளே விவாதம் செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
