முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அற்புதம்மாள்! ‘கண்டிப்பாக செய்கிறேன்’ உறுதியளித்த முதல்வர்! நடந்தது என்ன?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி பல வருடங்களாக கோரிக்கை எழுந்து வருகிறது.
30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துக் கொண்டு வருகிறது.
பேரறிவாளனை மீட்டெடுக்க அவரது தாயார் அற்புதம்மாள் பல வருடங்ளாக போராடி வருகிறார். தாயார் அற்புதம்மாளுக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது -
பேரறிவாளனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு பரோல் தர வேண்டி முதல்வரிடம் மனு கொடுத்தேன். உடனடியாக முதல்வர் 30 நாட்கள் பரோல் கொடுத்துள்ளார்.
அதற்காக நன்றி கூற தான் நான் இன்று தலைமைச்செயலகம் வந்தேன். எழுவர் விடுதலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று என் கோரிக்கையை முன்வைத்தள்ளேன்.
கண்டிப்பாக செய்கிறேன் என முதல்வர் உறுதியளித்துள்ளார். நீங்கள் என்ன உணர்வோடு இருக்கிறீர்களோ அதே உணர்வோடு தான் நானும் இருக்கிறேன் என்று முதல்வர் சொன்னார்.
இவ்வாறு அவர் பேசினார்.