முதல்வரை அவதூறாக பேசிய கிஷோர் கே.சுவாமி கைது - நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம்!

tamilnadu-politics
By Nandhini Jun 14, 2021 06:42 AM GMT
Report

திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதள பிரபலமான கிஷோர் கே. சுவாமியை போலீசார் கைது செய்ததற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பேசியதாக திமுக ஐடி பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நேற்று இரவு கிஷோர் கே. சுவாமியை கைது செய்யப்பட்டார்.

அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிஷோரை தாம்பரம் கிளை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவருக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து, கிஷோர் கே. சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திமுக தலைவர்களை விமர்சித்ததற்காக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

முதல்வரை அவதூறாக பேசிய கிஷோர் கே.சுவாமி கைது - நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம்! | Tamilnadu Politics

ஜனநாயகம் எங்கே போனது? ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பிரதமர் குறித்து பொய் பேசியது, திருமாவளவன் இந்து தர்மம், பிராமணர்கள் மற்றும் பிரதமர் குறித்து அவதூறாக பேசும் போதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த திமுகவினருமே குறிப்பிட்ட ஒரு சமுதாயமான பிராமணர்கள் குறித்து தவறாக பேசிவருகிறார்கள், தற்போது அவர்கள் தேவேந்திர குல வேலாளர்கள் குறித்து அவதூறாக பேசுகின்றனர்.

எதிர்கட்சித் தலைவர்களை நாய்கள், துர்நாற்றம் என அழைத்த போதும், பெண்களை அவமரியாதையாக பேசியபோதும் ஏன் திமுகவினர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை? உள்ளதை கூறியதற்காக ஒருவர் கைது செய்யப்படுவது தான் ஜனநாயகமா?” என பதிவிட்டுள்ளார்.