சசிகலாவின் 23வது ஆடியோ ரிலீஸ் - ‘என்னால் சும்மாலாம் உட்கார்ந்திருக்க முடியாது’ - அதிமுகவில் சலசலப்பு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று விடுதலையானார். அதன் பிறகு தமிழக அரசியலில் இறங்கி பட்டைய கிளப்புவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதிமுகவினருக்கிடையே சலசலப்பும் ஏற்பட்டது. ஆனால், அரசியலிலிருந்து ஒதுங்கி ஆன்மீக பயணத்தில் ஈடுபடபோவதாக திடீரென அறிவித்தார் சசிகலா. அதனையடுத்து, கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வந்தார் சசிகலா.
இதனையடுத்து, தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரானார் மு.க.ஸ்டாலின். தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. தற்போது, எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
தற்போது, சசிகலாவின் அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. தினம் ஒரு தகவல் மாதிரி, சசிகலாவின் தினம் ஒரு ஆடியோ உலா வந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ‘சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது... நீங்க மட்டுமில்ல எல்லோரும் நான் வரணும்னுதான் விரும்புறாங்க. நான் அவர்களிடம் நிச்சயம் வருவேன் என்று சொல்லிட்டுதான் இருக்கேன். கண்டிப்பா வருவேன். ஜெயலலிதா போல் பணிகளைச் சிறப்பாக செய்வோம்’ என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆனந்தனிடம் சசிகலா பேசிய ஆடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று மறுபடியும் சசிகலாவின் 23-வது ஆடியோ வெளியாகி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எம்.பிரபாகரன் என்ற அதிமுக தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில், ‘பாடுபட்டு வளர்த்த கட்சி. என்னால் இதையெல்லாம் பார்த்து சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. நிச்சயம் வருவேன். கட்சியை சரிசெய்வேன்’ என்று பிரபாகரனுக்கு உறுதியாக பேசியுள்ளார்
சசிகலாவின் தினம் ஒரு ஆடியோ ரிலீஸ் ஆகிக் கொண்டு வருவதால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இப்படியே போய்கொண்டு இருந்தால், இதற்கு என்னதான் முடிவு என்பது மட்டும் தெரியாமலேயே உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மட்டுமே சசிகலாவின் ஆடியோ குறித்து பதில் அளித்து வருகிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து பேசாமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.