இன்று மாலை ஊரடங்கு நிலவரம் குறித்து தமிழக ஆளுநரை முதல்வர் சந்திக்கிறார்!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது.
இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடினர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டது. கொரோனா மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்துக்குமே தட்டுப்பாடு கடுமையாக நிலவியது. இந்த பேரிடலிருந்து மக்களைக் காக்க, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் தமிக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஒவ்வொரு மாவட்டங்களாக நேரில் சென்று கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்தார். முழு ஊரடங்கை பிறப்பித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக நடவடிக்கைகளில் இறங்கியது. இதன்விளைவாக, கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. தொடர்ந்து 4 வாரங்களாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கும் கை கொடுத்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு பற்றி பேச இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க இருக்கிறார் தமிழக முதல்வர். இச்சந்திப்பில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் மருத்துவத் துறை செயலாளர் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்திக்க இருக்கிறார்கள்.
