என்னை யாராலும் தடுக்கவே முடியாது - சசிகலாவின் அடுத்த ஆடியோ ரிலீஸ் - குழப்பத்தில் அதிமுகவினர்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு விடுதலையானார்.
இதனையடுத்து, அரசியலில் இறங்கி தெறிக்கவிடுவார் என்று பார்த்தால், நான் அரசியலை விட்டு விலகி ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளப்போகிறேன் என்று அதிரடியாக அறிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை அடைந்தது.
திமுக அமோக வெற்றி அடைந்து தமிழக ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நிலையில் அதிமுகவின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர்.
இந்நிலையில், சில நாட்களாக சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வருவதாக ஆடியோக்கள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இதனால் அதிமுகவில் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. நான் மீண்டும் வருவேன்; அதிமுகவை சரி செய்வேன் என்று சசிகலா பேசும் ஆடியோ முதலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆடியோ விவகாரத்திற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். சசிகலாவை அதிமுகவில் கிடையாது. அவர் பேசிவருவது அமமுக தொண்டர்களுடன் தான் என்று கூறினார். இதனையடுத்து, நேற்று அதிமுகவின் புதுக்கோட்டை நகர இணைச் செயலாளர் பூரண ஆறுமுகம் என்பவருடன் சசிகலா தொலைபேசியில் பேசியுள்ளார்.

அந்த உரையாடலில், நிச்சயம் கட்சிக்கு மீண்டும் வருவேன். கட்சியை சரி பண்ணி அம்மா கொண்டு போனது போல செய்வேன். விரைவில் எல்லோரையும் சந்திக்கப் போகிறேன். கட்சியை நல்லா கொண்டு போகணும்; அதனால தான் ஆரம்ப கால கட்சிகாரர்களிடம் பேசுகிறேன். தமிழக மக்களின் உரிமையை நலனுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது என்று சசிகலா பேசியுள்ளார்.
இதனையடுத்து, மதுரை மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் ஆரோக்கிய ராஜாவிடமும், சசிகலா இவ்வாறு பேசி உறுதியளித்திருக்கிறார்.