தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் எதிர்த்து போராட்டம் செய்வோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை நாங்கள் எதிர்த்து போராட்டம் செய்வோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இருந்தாலும், மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைத்து அதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம் தமிழகத்தில் நுழைவுத்தேர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நீட் தேர்வு ஒரே ஒரு நாள் நடைபெறும் தேர்வு தான். ஆனாலும் அந்த ஒருநாள் மூலம் மாணவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராட்டம் செய்வோம் என்றார்.