திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்
திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியுதவியாக ரூ.2,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதனால், கொரோனா பரவி வரும் சூழலில் தமிழக மக்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து வேலையின்றி தவித்து வருகின்றனர். தங்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு இவர்களுக்கு கொரோனா நிவாராண நிதியாக ரூ.2,000 வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், திருநங்கையர் நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து திருநங்கைகளுக்கும் இந்த கொரோனா நிவாரண நிதி அளிக்கப்படும். இதன் வாயிலாக 6553 திருநங்கைகள் பலன் பெறுவர். இதில் ரேசன் அட்டை வைத்திருக்கும் திருநங்கைகள் முன்னதாக அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 உடன் சேர்த்து இதனையும் பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.