‘திமுக அரசால் பிராணமர்கள் சமூகம் அச்சத்தில் உள்ளது‘ - சுப்பிரமணியன் சாமி! சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசால் பிராணமர்கள் சமூகம் அச்சத்தில் உள்ளது என்றும் பத்மா சேஷாத்ரி பள்ளி மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை கலைப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்த சுப்பிரமணியன் சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை கே.கே.நகரில் செயல்படும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
மாணவிகளிடம் அநாகரிகமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப்பில் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் உஷாராகி, தன்னுடைய செல்போனில் உள்ள ஏராளமான மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் அவர்களுடன் பேசிய அந்தரங்க சேட் ஆகியவற்றை டெலிட் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில ஆசிரியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என ராஜகோபால் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதற்கிடையில், ஆசிரியர் ராஜகோபலன் மீது போக்சோ சட்டப்பிரிவு, 354(ஏ)- பாலியல் தொல்லை, தொழில் நுட்ப சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த பாலியல் குற்றச்சாட்டினால் பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலர் ஆசிரியர் ராஜகோபலனுக்கு எதிராகவும், பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சாமி, ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசால் பிராணமர்கள் சமூகம் அச்சத்தில் உள்ளது. ஆகவே, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பத்மா சேஷாத்ரி பள்ளிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக அரசு நடந்துகொண்டால், தமிழக அரசையே கலைத்துவிடுவேன் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
பத்மா சேஷாத்ரி பள்ளி மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை கலைப்பேன் என்று எச்சரித்த சுப்பிரமணியன் சாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பலர் வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது சுப்பிரமணியன் சாமிக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
