ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகளவில் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதற்கு முன் இரு வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோதும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்காக கடைகள் 6 மணி முதல் 10 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதிப்பு விவரங்கள் எப்படி உள்ளன. தளர்வுகளை அறிவித்தால் மீண்டும் உயரும் வாய்ப்பு உள்ளதா? ஊரடங்கை நீட்டிப்பு செய்ய வேண்டுமானால் இன்னும் எத்தனை நாள்களுக்கு செய்ய முடியும் என பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் தமிழக அரசு தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் சரிவைச் சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் பாதிப்பு பரவலாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.