பா.ஜ.கவின் 7ம் ஆண்டு நிறைவு நாள் - மக்களுக்கு சேவை செய்கிற தினமாக கொண்டாட வேண்டும் - எல். முருகன்
மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்ற, பா.ஜ.க. 2014ம் ஆண்டு துவங்கி, வரும் 30ம் தேதியோடு, 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எனவே, வரும் 30ம் தேதி, தமிழகம் முழுவதும் இருக்கிற பா.ஜ., நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள் அனைவரும், மக்களுக்கு சேவை செய்கிற தினமாக கொண்டாட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது -
தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள், தடுப்பூசி போடுவதற்கு, மக்களை தயார் செய்தல், கொரோனா சிகிச்சைக்காக, மக்களுக்கு தேவையான உதவிகள் என, பலவித சேவைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும், ஓட்டுச்சாவடி அளவில் நடக்க வேண்டும். ஒவ்வொரு நிர்வாகியும் குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து, அந்த ஒரு நாள் முழுதும், அந்த கிராமத்தில் சேவையாற்ற வேண்டும்.
கட்சியின் அணி, பிரிவு நிர்வாகிகள் அனைவரும், ரத்த தான முகாம் நடத்தி, பொது மக்கள் சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும். ரத்த தான முகாம், 30ம் தேதி முதல், மூன்று நாட்கள் நடத்தலாம்.
இதே காலக்கட்டத்தில், நாம் ஏற்கனவே செய்து வருகிற, ஏழை மக்களுக்கு, உணவு மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். முகக் கவசம், கபசுர குடிநீர் வழங்குவதும் தொடர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.