தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இதனையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த முகாமில் 4-ஆயிரம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ அன்பரசன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் பேசியதாவது -
மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியிருக்கிறது.
கொரோனா தொற்று சங்கிலியை நாம் உடைத்தெறிக்க வேண்டும்.
தமிழகத்தில் தினமும் 78,000 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் தடுப்பூசி வீணடிப்பு 6 சதவிகிதம் ஆக இருந்ததை கடந்த இரு வாரங்களில் 1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்காததுதான் 2-வது அலை பரவலுக்கு முக்கிய காரணம்.
தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.