அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!
தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குத்தடையின்றி கிடைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகளவில் உயர்ந்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து கடந்த 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. தற்போது, தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
அத்துடன் மக்கள் பொதுநலன் கருதி, நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி மாவட்டவாரியாக காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், முழு ஊரடங்கில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். காய்கறிகள் உள்ளிட்டவை தடையின்றி மக்களுக்கு கிடைக்க தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செயலாளர் கோபால் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
