‘வாகனங்களை ஒப்படைத்து விடுங்கள்’ : முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!

tamilnadu-politics
By Nandhini May 25, 2021 05:41 AM GMT
Report

தமிழகத்தில் இ-பதிவு முறையில் அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும், அதன் உரிமைதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -

கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் அத்தியாவசிய பணிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அந்த பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வாகனங்களில் சென்று வழிபடும் முறை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மட்டும் அனுமதிப்பதற்கும் , பதிவு செய்யாமல் அனுமதியின்றி சட்டத்தை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்வதற்கு காவல்துறையினருக்கு முழு உரிமை உண்டு. யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இ பதிவு முறையை பயன்படுத்தி இயக்கப்பட்ட ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களும் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றை திரும்பப் பெறக்கோரி வாகன ஓட்டிகள் இரண்டாவது நாளாக திருவொற்றியூரில் சாலை மறியல் செய்து வருவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது.

அவர்கள் மறியல் செய்வதற்கான மற்றொரு முக்கியமான காரணம் , முழுஊரடங்கு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ள இந்த சூழ்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கள் வாகனங்களில் உள்ள உதிரி பாகங்கள் காணாமல் போகும் சூழ்நிலை உருவாகும் என்பது தான். அவருடைய கோரிக்கையில் நிச்சயம் நியாயம் உள்ளது. ஏற்கனவே முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து உள்ளவர்கள் தங்கள் வாகனங்களில் உள்ள விலை உயர்ந்த உதிரிபாகங்கள் சமூக விரோதிகளால் காணாமல் போகலாம்.

அந்த உதிரி பாகங்களை புதிதாக வாங்க பல ஆயிரம் ரூபாய்களை மேலும் அவர்கள் செலவழிக்க வேண்டி வரும். இதன் மூலம் அவர்கள் மேலும் கடனாளியாக ஆகக் கூடிய சூழ்நிலை உருவாகும் . காவல்துறையினருக்கும் தற்போதுள்ள வேலை பளுவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சேதாரமில்லாமல் இருக்கின்றனவா என்பதை 24 மணி நேரமும் கண்காணிப்பது என்பது மிகவும் கடினமான செயல்.

எனவே வாகன ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து சட்டப்படி நடப்பதற்கு நண்பர் என்பதை நிலைநாட்டும் வகையில் சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டில் இபதிவு முறையில் அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் அதன் உரிமையாளர்களிடம் உடனடியாக திரும்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.