பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்ய ரூ. 50 கோடி ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின் உத்தரவு!
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்த ரூ.181 கோடி நிதியிலிருந்து, RT-PCR பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்புப் பணிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் அனைவரும் நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் நன்கொடையை அளித்து வந்தனர்.
நேற்றைய நிலவரப்படி மொத்தமாக 181 கோடி ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக பெறப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண பணிகளுக்காக நன்கொடை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை தமிழக முதல்வர் தெரிவித்துக் கொண்டார்.
ரெம்டெசிவர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வாங்குவது, மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜன் ரயில் போக்குவரத்து மூலம் கொண்டு வருவது என முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் முன்பு இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஆர்டிபிசிஆர் கருவிகளை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
இன்றிலிருந்து தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இந்த வார காலத்தில் நன்கொடையாளர்கள் அனைவரும் நேரில் வந்து தன்னிடம் நன்கொடை அளிப்பது தவிர்க்க வேண்டும் என்றும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளம் வாயிலாக நன்கொடைகளை தொடர்ந்து அளிக்குமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.