இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பதவியேற்பு!
கடந்த 11ம் தேதி எம்.எல்.ஏக்களாக பதவியேற்க முடியாத சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக சார்பில் சிவசங்கர், மதி வேந்தன், காந்திராஜன், வரலட்சுமி, வெங்கடாச்சலம் மற்றும் அதிமுக சார்பில் வைத்திலிங்கம், விஜயபாஸ்கர் ,கடம்பூர் ராஜு, இசக்கி சுப்பையா உட்பட 9 பேர் பதவியேற்று கொண்டார்கள்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைப் பற்றி அமோக வெற்றி பெற்றது.
இதனையடுத்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக கடந்த 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கடந்த 11ம் தேதி அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், 31 அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்து கொண்டார்கள்.
தமிழகத்தில் இதுவரை பதவி ஏற்காத 6 திமுக, 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் உள்ள நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் 9 பேருக்கு பதவி பிரமாணம் நடைபெற்றது. புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேருக்கும் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கொரோனா உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களால் 11ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க வில்லை. இதனையடுத்து, இன்று 9 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டார்கள். திமுக எம்.எல்.ஏ. சண்முகையா மட்டும் இன்னும் பதவி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


